Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 24 ஜூன் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அக்கிரெட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன். இவருடைய மூன்று பிள்ளைகள் அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கான உடல் தகுதி மற்றும் மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியதையடுத்து, ரங்கன் தனது பிள்ளைகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களை பெற பள்ளிகுப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகியுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் வெங்கடலட்சுமி, மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டுமானால் ஒருவருக்கு ரூ. 300 கொடுக்க வேண்டும்.
அதன்படி, 3 பேருக்கு மொத்தம் ரூ. 900 கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவரின் இந்த செய்கையால் அதிருப்தியடைந்த ரங்கன், இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
அதன்படி, ரங்கனிடம் ரசாயனம் பூசப்பட்ட ரூ. 900 பணத்தை கொடுத்து மருத்துவரிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர். ரங்கன் மருத்துவரிடம் அந்த பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், மருத்துவர் வெங்கடலட்சுமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரிடமிருந்து லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ.900 பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அரசு மருத்துவர் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மருத்துவர் வெங்கடலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோதே, தமிழ்நாட்டில் லஞ்சம் லாவண்யம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும், தமிழகத்தில் லஞ்சம் வாங்குகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், லஞ்சம் வாங்குகிற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் தற்போது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / ANANDHAN