Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச)
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாளையொட்டி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வெங்கட்ரமணன், மரிய வில்சன், குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் வி.பி. சிங் என்றும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததும் அவரது முக்கிய சாதனைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
மேலும், வி.பி. சிங் கனவு கண்ட சமூக நீதியை நடைமுறைப்படுத்தும் அரசாக தற்போதைய அரசு செயல்படும் என்றும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள சமூக நீதி கணக்கெடுப்பு அதற்கான முக்கிய முன்னெடுப்பு என்றும் தெரிவித்தார். சமூக நீதி குறித்து பேசும் திமுக அரசு, ஆட்சியில் இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட எந்த முக்கிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுவதாகவும், இது அரசின் வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.
மக்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து கேலி, கிண்டல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு வெற்றிக் கழகம் மரபுகளையும் ஜனநாயக நடைமுறைகளையும் மதித்து செயல்பட்டு வருவதாக கூறினார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றதாகவும், தற்போது அந்த ஊழல் நடைமுறைகளை ஒழிக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக தலைவர்கள் கொள்கை ரீதியான விவாதங்களை தவிர்த்து தனிப்பட்ட விமர்சனங்களில் மட்டுமே ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அவரது கருத்துகளுக்கு மரியாதை இருப்பதாகவும், நல்ல ஆலோசனைகளை அரசு வரவேற்கும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
அதே நேரத்தில், கடந்த நான்கு நாட்களாக நடந்த சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாகப் பார்த்த பிறகே விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ