Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவில் தனது முதலீடுகளை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆன்டி ஜாசி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கணினி சேவைகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள், தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உலகத் தரத்திலான தொழில்நுட்ப வசதிகளை வழங்க அமேசான் உறுதிபூண்டுள்ளதாக ஆண்டி ஜாசி தெரிவித்தார்.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கூடுதலாக 13 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு பெரும்பாலும் அமேசானின் கிளவுட் சேவை பிரிவான AWS மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு சேவைகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் அமேசான், இ-காமர்ஸ், கிளவுட் சேவைகள், டிஜிட்டல் கட்டண வசதிகள் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. புதிய முதலீட்டு திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் அமேசானின் புதிய முதலீட்டு அறிவிப்பு, இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மீது சர்வதேச நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P