Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், கல்வித் தரம் வீழ்ச்சியடைந்ததே இதற்கான முக்கிய காரணம் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,26,959 இடங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2026-27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 2.24 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 5 முதல் 18 வரை நடைபெற்ற கலந்தாய்வுக்குப் பிறகு, வெறும் 71,502 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும், 55,457 இடங்கள் அதாவது 43.68 சதவீத இடங்கள் இன்னும் காலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள இடங்களை நிரப்ப மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தாலும், அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் மொத்த இடங்களில் 76.20 சதவீதம் நிரப்பப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு கல்லூரிகளில் சேருவதற்கு முன்பு கடுமையான போட்டி நிலவியதாகவும், கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டாலும் அவை நிரம்பியதாகவும் நினைவுகூர்ந்த அன்புமணி, கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறினார். 2022-23 ஆம் ஆண்டில் 1.08 லட்சம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், 2025-26 ஆம் ஆண்டில் அது 96 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும், தற்போது அதைவிட மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி கிட்டத்தட்ட இலவசமாக வழங்கப்பட்டாலும், ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வது, அரசு கல்லூரிகளின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருப்பதற்கான சான்று என அவர் கூறியுள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், சுமார் 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9,000 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வித் தரம் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் அரசு கல்லூரிகளை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு போதிய அளவில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும் இதுவரை மிகக் குறைந்த அளவிலேயே நியமனங்கள் நடைபெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி, கல்வித் தரத்தையும் மாணவர் சேர்க்கையையும் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam