திண்டுக்கல் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
திண்டுக்கல், 25 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் த
Anti-Corruption Department conducts surprise raid


திண்டுக்கல், 25 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் கண்ணன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நத்தம் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பொறியாளர் கண்ணனின் இல்லத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனைக்கு உள்ளாகியுள்ள பொறியாளர் கண்ணன், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என கூறப்படுகிறது.

இதனால் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஒப்பந்த முறைகேடுகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கைப்பற்றப்பட்டவை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிவில் முழு விவரங்கள் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b