Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினரை தமிழக முதல்வர் விஜய் இதுவரை நேரில் சென்று சந்திக்காதது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
கரூரை புறக்கணித்ததைப் போலவே பெரியபாளையத்தையும் அரசு புறக்கணிக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஆணவத்தையும் அலட்சியத்தையும் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சினிமா துறையினரை தினசரி சந்திக்கும் முதல்வருக்கு, உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்திக்க நேரமோ மனமோ இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்ததோடு அரசின் கடமை முடிந்துவிடாது என்றும், அவர்களை நேரில் சந்திக்காமல் அரசு ஒதுங்கி நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரே நாளில் 10 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இவ்வாறு மக்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறையின்றி செயல்படும் அரசின் உண்மை முகம் வெளிப்படத் தொடங்கியுள்ளதாகவும், தனது பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P