தவெக எம்.எல்.ஏ மீது அக்கட்சியின் 199வது வட்ட துணை செயலாளர் குற்றச்சாட்டு
சென்னை, 25 ஜூன் (ஹி.ச.) சென்னை சோழிங்கநல்லூர் பகுதியின் தவெக 199வது வட்ட கழக துணைப் பொது செயலாளராக பதவி வகித்துவந்த வைதேகி என்பவர், தமது பொறுப்பை சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏவும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான ஈசிஆர் சரவணன் பறித்துவிட்டதா
Tvk


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியின் தவெக 199வது வட்ட கழக துணைப் பொது செயலாளராக பதவி வகித்துவந்த வைதேகி என்பவர், தமது பொறுப்பை சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏவும், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான ஈசிஆர் சரவணன் பறித்துவிட்டதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சரவணன் மீது வைத்துள்ளார். அவர் பேசுகையில், “லஞ்சம் இல்லாமல் ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கனவை கெடுக்கும் வகையில் சென்னை சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ ஈசிஆர் சரவணன் பல முறைகேடுகளில் ஈடுட்டு வருகிறார். அவர் புதிதாக வருபவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, பொறுப்புகளை வழங்கி வருகிறார்.

கட்சியில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து அவரிடம் கேட்டதால் எனது பதவியை பறித்துவிட்டார். இந்த முறைகேடுகள் சம்பந்தமாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்தையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் நேரில் சந்திக்க முயன்றும் முடியவில்லை. மேலும், சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ செய்யும் குளறுபடிகள் குறித்து மனு அனுப்பியும் இதுவரை எந்தவொரு விசாரணையும் என்னிடம் நடத்தவில்லை” என்றார்.

தொடர்ந்து, “கணவனை இழந்த நான் நள்ளிரவு 2 மணிக்கு கூட கட்சிக்காக போஸ்டர் ஒட்டியுள்ளேன். எங்கள் தலைவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அயராது உழைத்தேன். ஆனால் என்னை வட்ட துணை செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிதாக கட்சிக்கு வந்த ஒருவருக்கு அந்த பதவியை எம்.எல்.ஏ சரவணன் வழங்கியுள்ளார்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், பணம் வாங்கிக்கொண்டு பொறுப்புகளை வழங்குவதற்காகவா முதலமைச்சர் அவரை எம்.எல்.ஏவாக வைத்தார் என்று கேள்வி எழுப்பியதோடு, முதலமைச்சருக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும், கட்சியில் யார் என்ன செய்தாலும் எப்படியும் அவருக்கு தெரிந்துவிடும் என்றும் எச்சரித்தார்.

ஈசிஆர் சரவணன் எம்.எல்.ஏவான பிறகு அவரை பலமுறை சந்திக்க முயற்சித்தாகவும், ஆனால் தான் ஒரு துணை வட்ட செயலாளராக இருந்தும் தன்னால் அவரை சந்திக்க முடியவில்லை என்றும், ஃபோன் செய்தால் அவருடைய நண்பரான மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் எடுத்து பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்.

அடுத்தடுத்த குற்றசாட்டுகளை முன்வைத்த வைதேகி, தான் வட்டிக்கு பணம் வாங்கி கட்சிக்காக செலவு செய்ததாகவும், ஆனால் சரவணன் எம்.எல்.ஏவான பிறகு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை கட்சியில் புதிதாக இணைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொதுச் செயலாளர் தன்னை அழைத்து பேசும்போது, எம்.எல்.ஏ லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரத்தையும் காட்ட தயாராக இருப்பதாகவும் வைதேகி கூறியுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN