ரூ.127.21 கோடியில் 300 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம் - மாநகர பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்
சென்னை, 25 ஜூன் (ஹி.ச.) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரூ.127.21 கோடி மதிப்பிலான 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகள் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் போக்குவரத்
Cm


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரூ.127.21 கோடி மதிப்பிலான 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த புதிய பேருந்துகள் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் இயக்கப்படுகின்றன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 300 பேருந்துகளில் 164 பேருந்துகள் டீசல் எரிபொருளிலும், 136 பேருந்துகள் சிஎன்ஜி (CNG) எரிபொருளிலும் இயங்கவுள்ளன.

இதில் 65 பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கும், 235 பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல் சேவையாக சேலம் மாவட்டத்தின் ஆட்டையாம்பட்டி வழியாக ராசிபுரம் – இளம்பிள்ளை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்தார்.

தலைமைச் செயலகத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை சென்று மீண்டும் தலைமைச் செயலகம் திரும்பிய அவர், வழியெங்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பேருந்துகளை பார்வையிட்டு, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். தனது செல்போனில் பயணக் காட்சிகளையும் பதிவு செய்தார்.

இந்தப் புதிய பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என மாற்றப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

பேருந்தில் பயணித்த முதலமைச்சர், தன்னுடன் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் டிக்கெட் எடுத்து கட்டணம் செலுத்தியதாக நடத்துநர் சாமுவேல் தெரிவித்தார். மேலும், நீண்ட காலமாக மாநகர பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் இருந்ததாக முதலமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய பேருந்துகளின் வசதிகள் குறித்து ஓட்டுநரிடம் நேரடியாக கேட்டறிந்த முதலமைச்சர், பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு சௌகரியமான பயண அனுபவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள எளிய டிக்கெட் வழங்கும் முறை நடத்துநர்களின் பணிச்சுமையை குறைத்துள்ளதாகவும் நடத்துநர் சாமுவேல் கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ