தங்க மோதிரத் திட்டத்தை கைவிட்டு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னை, 25 ஜூன் (ஹி.ச.) பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல வசதிகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று மனிதந
ஜவாஹிருல்லா


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)

பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல வசதிகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

.தமிழகத்தின் பல அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு அறைகள் நெரிசல், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, போதிய படுக்கை வசதியின்மை மற்றும் மருத்துவ உபகரணக் குறைபாடுகளுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

.இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் போதிய வசதியின்றி பிரசவ சேவைகளைப் பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுவது அரசின் முன்னுரிமை சரியான திசையில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பதை விட, தாய்மார்களின் உயிரைக் காக்கும் நவீன மகப்பேறு வார்டுகள், குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற அடிப்படை சுகாதார வசதிகளே மக்களுக்கு அவசியம் தேவைப்படுவதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசின் கடமை காட்சிப்படுத்தும் திட்டங்களை அறிவிப்பது அல்ல என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நீடித்த முதலீடுகளை மேற்கொள்வதே அரசின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்க மோதிரம் சில நாட்களுக்கு மட்டுமே செய்தியாக இருக்கலாம்; ஆனால் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் பல தலைமுறைகளுக்கு பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை குறிப்பாக ஊரக அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு அறைகள், குழந்தைகள் நலப் பிரிவுகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் திருப்பிவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுவே சமூக நலன், தாய்-சேய் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார முன்னேற்றத்திற்கு ஏற்ற பொறுப்பான முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P