Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 25 ஜூன் (ஹி.ச.)
சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்
(வயது 65). இவர் கடந்த ஆட்சிக்காலத்தில் தனது மகனுக்கு போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்குவதற்கு முயற்சி செய்துவந்துள்ளார்.
அப்போது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் (வயது 60) என்ற நபரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
அந்த நபர், தான் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், அவர் மூலம் சீனிவாசனின் மகனுக்கு தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் 2023 - 2025க்கு இடைபட்ட காலத்தில் பல்வேறு தவணைகளில் சுமார் 23 லட்சம் ரூபாய் பணத்தை சீனிவாசனிடம் கேட்டு வாங்கியுள்ளார்.
அவரும் தனது மகனுக்கு எப்படியாவது அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கேட்டபோதெல்லாம் பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால், இதுவரை இளஞ்செழியன் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
அவரிடம் சீனிவாசன் தான் கொடுத்த பணத்தையெல்லாம் திருப்பி தருமாறு கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், தனது பணத்தை மீட்டு தரும்படியும், மோசடி செய்த இளஞ்செழியன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், குற்றவாளியை விரைந்து கைதுசெய்ய காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், அரியலூரிலிருந்த இளஞ்செழியன் தலைமறைவாகி விட்டதால் தனிப்படை போலீசார், அவரை வலைவீசி தேடிவந்துள்ளனர்.
அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து தேடியபோது, அவர் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் ஈரோட்டிற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் என குறிப்பிடப்பட்ட இரண்டு அடையாள அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது, இளஞ்செழியனை சென்னை அழைத்துவந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் இதேபோன்று பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் என்று கூறப்பட்ட இளஞ்செழியன், ‘யாரென்றே தனக்கு தெரியாது’ எனவும், அந்த நபருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சிவசங்கர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN