அமைச்சர் ஆனந்த் மீதான போக்குவரத்து இடையூறு வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 25 ஜூன் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து இடையூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி, தமிழக வெற்றிக்
உயர்நீதிமன்றம்


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து இடையூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் திருச்சி அரசியல் சுற்றுப்பயணத்திற்கான காவல்துறை அனுமதி தொடர்பாக ஆனந்த் திருச்சிக்கு சென்றிருந்தார்.

அப்போது, திருச்சி – புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் மனுக்களை வைத்து வழிபாடு நடத்தினார்.

இந்த நிகழ்வில் ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டதால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

மேலும், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், அவற்றை அகற்றுமாறு காவல்துறையினர் கோரியபோதும் தொண்டர்கள் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடுதல், காவல்துறையினரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கரிகாலன் உள்ளிட்ட பலர் மீது திருச்சி விமான நிலைய காவல்துறையினர் 2025ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆனந்த் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் உள்நோக்கத்துடன் காவல்துறை இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆனந்த் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டு, அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P