அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? -பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்
பெங்களூரு , 25 ஜூன் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா பண்ணிகோடு கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாத சந்தேக நபர் சுகைல் (20) கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை குற
K


பெங்களூரு , 25 ஜூன் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா பண்ணிகோடு கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாத சந்தேக நபர் சுகைல் (20) கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தசாராம்புரா பகுதியைச் சேர்ந்த லியாகத் அலியின் மகனான சுகைல் மீது ஏற்கனவே தேசத்துரோக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த அவர், உத்தரபிரதேசத்தில் இருந்து தப்பி கர்நாடகாவுக்கு வந்து, ஹரிஹரா அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் தங்கி, ஒரு தொழிற்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

இதன்மூலம் தனது அடையாளத்தை மறைத்து வாழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான சுகைல் மீது ஹரிஹரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் துமகூரு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து நேற்று காலை முதல் நள்ளிரவு வரை அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின்போது,

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

குறிப்பாக, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை குண்டுவைத்து தகர்க்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகைலின் செல்போனை ஆய்வு செய்தபோது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைகளில் ஏந்தியபடி எடுத்த புகைப்படங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA