கரூர் சாலை டெண்டர் முறைகேடு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு
கரூர், 25 ஜூன் (ஹி.ச.) கரூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாலைப் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC
H


கரூர், 25 ஜூன் (ஹி.ச.)

கரூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாலைப் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.

அறப்போர் இயக்கம் அளித்த ஊழல் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, எ.வ. வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் கண்ணன், சென்னையில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றிய பூபாலன் சிங், கரூரில் டிவிஷனல் அக்கவுண்டண்டாக இருந்த பெரியசாமி, திண்டுக்கல்லில் டிவிஷனல் இன்ஜினியராக இருந்த சத்தியபாமா, கோயம்புத்தூரில் டிவிஷனல் இன்ஜினியராக இருந்த நிதிலன், சென்னையில் உதவி இன்ஜினியராக இருந்த ரபிக் முகமது, கரூரில் உதவி இன்ஜினியராக இருந்த தீபிகா, திருச்சியில் உதவி இன்ஜினியராக இருந்த கார்த்திக், கரூரில் கணக்காளர்களாக இருந்த சத்யா மற்றும் சங்கர் ஆனந்த் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்புடைய சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P