Enter your Email Address to subscribe to our newsletters

உதகை, 25 ஜூன் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாயார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு நேரத்தில் நாயை வேட்டையாடும் நோக்கத்துடன் சிறுத்தை ஒன்று புகுந்தது.
வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்த சிறுத்தை, வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை தாக்க முயன்றபோது பெரும் சத்தம் எழுந்தது.
சத்தம் கேட்டு எழுந்த வீட்டின் உரிமையாளர், சற்றும் தாமதிக்காமல் துணிச்சலுடன் செயல்பட்டு சிறுத்தையை வீட்டிற்குள்ளேயே அடைத்து வெளியில் இருந்து கதவை பூட்டினார்.
உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மசினகுடி வனத்துறையினர் மற்றும் வனக்காப்பாளர்கள், வீட்டிற்குள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்த சிறுத்தையை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், வீட்டின் முன்பு கூண்டு வைத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தையை உயிருடன் பிடித்தனர்.
பிடிபட்ட சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த வனத்துறையினர், அதன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்தனர்.
பின்னர், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிகூர் வனப்பகுதியில் அந்த சிறுத்தையை பாதுகாப்பாக விடுவித்தனர்.
சமீப காலமாக மாயார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்கவும், வீட்டு கால்நடைகளை பாதுகாப்பாக கட்டி வைக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b