Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 25 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் செயல்படாமல் இருந்த பிரில்லியன்ட் பட்டாசு எனும் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி, செங்கமலப்பட்டியில் செயல்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பட்டாசு ஆலைக்குள் ஹரி பாரத் 19, சுபாஷ் 19, மாரிசெல்வம் 19 ஆகிய மூன்று இளைஞர்கள் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் புகைபிடித்தபோது, தீக்குச்சியை அல்லது சிகரெட் துண்டை அங்கு கிடந்த கழிவு பட்டாசுகளின் மீது தவறுதலாக வீசியுள்ளனர்.
இதில் கழிவு பட்டாசுகள் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறின. வெடி விபத்தின் தீவிரத்தால் மூன்று இளைஞர்களும் உடலில் பலத்த தீக்காயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, படுகாயமடைந்த மூவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
செயல்படாத ஆலையாக இருந்தபோதும், அங்கு அகற்றப்படாமல் இருந்த கழிவு வெடிபொருட்களே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த ஹரி பாரத், சுபாஷ், மாரிசெல்வம் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செயல்படாத பட்டாசு ஆலைகளில் உள்ள கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான இடங்களுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b