பழைய பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து - 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
காஞ்சிபுரம், 25 ஜூன் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பொருட்கள் கடை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகனங்
பழைய பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து - 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்


காஞ்சிபுரம், 25 ஜூன் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பொருட்கள் கடை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கடையின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகனங்கள் தீயில் சிக்கி கொழுந்துவிட்டு எரிந்தன.

வாகனங்களில் இருந்த எரிபொருள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் காரணமாக தீ மளமளவென பரவியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

திடீரென எழுந்த கரும்புகையால் சிறுகாவேரிப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

விபத்தின் தீவிரம் காரணமாக காஞ்சிபுரம் - வேலூர் பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பயணிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நான்கு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு பல லட்சங்களை தாண்டும் என அஞ்சப்படுகிறது.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b