Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
தமிழக மின்சார வாரியத்தின் கடந்த 25 ஆண்டுகால செயல்பாடுகள், வரவு-செலவு விவரங்கள், கடன் சுமை, மின் உற்பத்தி, பணியாளர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மின்வாரியத்தின் தற்போதைய நிலை மற்றும் அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மின்வாரியம் 2001-ஆம் ஆண்டுக்கு முன்பு கடன் சுமையின்றி செயல்பட்ட நிலையில், தற்போது ரூ.2,47,130 கோடி கடன் சுமையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.87,399 கோடி புதிய கடன் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதே காலகட்டத்தில் மின்வாரியத்தின் இழப்பு ரூ.34,447 கோடியாக இருந்தாலும், வருவாய் ரூ.4,97,996 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், வருவாய் அதிகரித்தும் கடன் சுமை தொடர்ந்து உயர்ந்திருப்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்வாரியத்தின் நிதிநிலையை காரணம் காட்டி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வந்ததாகக் கூறிய அமைச்சர், இந்த ஆண்டு 3.57 சதவீத மின் கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டிய நிலை இருந்தபோதிலும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது. மக்களின் மீது கூடுதல் சுமையை சுமத்த மாட்டோம் என்று உறுதியளித்தார்.
தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை 21,000 மெகாவாட் என்ற நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி வெறும் 3,495 மெகாவாட் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மத்திய மின் தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து 4,246 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறினார்.
குறுகிய கால ஒப்பந்தங்களின் மூலம் அதிக விலையில் மின்சாரம் வாங்கப்படுவதால் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இனி நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையமோ அல்லது நீர்மின் திட்டமோ தொடங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கும், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள உப்பூர் அனல் மின் திட்டத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றார். மின் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி அரசு செயல்படும் என்றும் கூறினார்.
பணியாளர் பற்றாக்குறை மின்வாரியத்தின் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக கூறிய அவர், மொத்தம் 1.40 லட்சம் பணியிடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது 74,714 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 343 பேர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டதாக கூறிய அமைச்சர், இந்த ஆண்டில் மட்டும் 20,449 புதிய பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.
மின்வாரியத்தின் கட்டமைப்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் 1,910 துணை மின் நிலையங்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் 400-க்கும் அதிகமான துணை மின் நிலையங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 122 துணை மின் நிலையங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் 238 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். இதனுடன் 1.5 லட்சம் புதிய மின்மாற்றிகள் வாங்கப்படவுள்ளதோடு, இந்த ஆண்டிலேயே 60,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பல மாதங்களாக ஊதியம் பெறாமல் பணியாற்றியதாக புகார்கள் வந்துள்ளதாகவும், ஒப்பந்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கியதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகே அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் மின் கொள்முதல், மின்மாற்றி கொள்முதல், ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய அமைச்சர், மின் கொள்முதலில் மட்டும் ரூ.58 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பல ஒப்பந்தங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். சந்தேகத்திற்குரிய ஒப்பந்தங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலவச மின்சாரம் மற்றும் மானிய திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறை காரணமாக மாதம் ஒருமுறை மின் கணக்கீட்டை தற்போது நடைமுறைப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
2026-27 நிதியாண்டில் மின்வாரிய வளர்ச்சி, புதிய பணியாளர் நியமனம், துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.49,532 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த செலவுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ