Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 10 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவான நிலையில், அதன் அதிர்ச்சி அடங்குவதற்குள் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 7-ஆம் வகுப்பு மாணவி மீது இரு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி விரைவில் உடல் மற்றும் மனநலத்துடன் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், பெண் குழந்தைகளை வெளியே அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள் மற்றும் தனியாக வசிக்கும் முதியோரின் பாதுகாப்பு குறித்து மக்கள் கவலையுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் இனியும் சமரசம் செய்யாமல், சீர்குலைந்த சட்டம்-ஒழுங்கு நிலையை சீரமைத்து, குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ