Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 25 ஜூன் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மில் ரோடு பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சத்யபாமா வீட்டில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) மெக்சலின் எஸ்குவால் தலைமையில், ஆய்வாளர்கள் ஜான் பெஞ்சமின், ராபின்சன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சத்யபாமா நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றிய காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, அவரது வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், நிலம் மற்றும் கட்டிட சொத்துகள் தொடர்பான பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பழனியில் நடைபெற்றுள்ள இந்த சோதனையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சோதனை நிறைவடைந்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam