Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டலில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பெயர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெறும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், இந்த பட்டியலில் இடம்பெறாத மாணவர்களுக்கு மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை எனவும், அவர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட மதிப்பெண்களையே இறுதியானதாக கருத வேண்டும் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
மதிப்பெண் உயர்வு பெற்ற மாணவர்கள் புதிய மதிப்பெண் சான்றிதழை தங்கள் பள்ளிகள் மூலமாக பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.
இணையதளத்தில் ஒரே நேரத்தில் பலர் பார்வையிடுவதால் சர்வர் மெதுவாக செயல்பட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மறுகூட்டல் முடிவுகள் உயர்கல்வி சேர்க்கைக்கு உடனடியாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b