Enter your Email Address to subscribe to our newsletters

பாளையங்கோட்டை, 25 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை முதல் போலீசார் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையம் உதவி ஆணையர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சிறை வளாகத்திற்குள் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதிகள் தங்கும் அறைகள், சமையல் கூடம், பார்வையாளர் அறை மற்றும் சிறை வளாகத்தின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் போலீசார் முழுமையான சோதனையை நடத்தினர்.
சிறைத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இதுபோன்ற திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிறைக்குள் சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b