திருமணத்திற்கு மறுத்ததால் ஆணவக் கொலை என மிரட்டல் - பாதுகாப்பு கோரி இளம்பெண் மனு
ராணிப்பேட்டை, 25 ஜூன் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவர் நவல்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞரான பால் சுரேஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இரு
Honor kill


ராணிப்பேட்டை, 25 ஜூன் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவர் நவல்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞரான பால் சுரேஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காயத்ரியின் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பகவத் என்பவர் அவருடைய தம்பி சுரேஷை, திருமணம் செய்து கொள்ளுமாறு காயத்ரியை கட்டாயப்படுத்தி வருவதுடன், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தால் குடும்பத்தினரையே ஆணவப் படுகொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். மேலும் சாதிரீதியாகவும் அவதூறாக பேசி வந்துள்ளார்.

மேலும், வழக்கறிஞர் பகவத், கண்ணன், மணிகண்டன், பிரபு, சுந்தர், சந்தோஷ் மற்றும் சிலர், காயத்ரியின் வீட்டிற்கு நேரடியாக சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், காயத்ரி வெளியே செல்லும் போது சாலையில் வழி மறித்து மிரட்டுவது, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவது என தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

குறிப்பாக, “நான் ராணிப்பேட்டையில் செல்வாக்கு மிக்கவன். காவல் நிலையம் அல்லது நீதிமன்றம் என எங்கு சென்றாலும் என்னை எதுவும் செய்ய முடியாது. எனவே திருமணத்திற்கு கட்டாயம் சம்மதிக்க வேண்டும்” என்றும் காயத்ரியை வழக்கறிஞர் பகவத் மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த காயத்ரி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்கூறியவற்றை குறிப்பிட்டுள்ளதுடன், ஆணவ படுகொலை செய்துவிடுவதாக மிரட்டுவதால் தனக்கும், தன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், வழக்கறிஞர் பகவத் தொடர் மிரட்டல்கள் விடுத்து வருவது குறித்து ஏற்கனவே ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த போதிலும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்களது புகாரை அலட்சியப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தன்னை கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்தி மிரட்டல் விடுத்து வரும் வழக்கறிஞர் பகவத், சுந்தர், மணிகண்டன், கண்ணன், சந்தோஷ் உள்ளிட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது காதலர் பால் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN