Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 ஜூன் (ஹி.ச.)
கோவை வடவள்ளி புறநகர் காவல் நிலையத்தின் முகப்பில் அமைந்துள்ள பெயர் பலகையை முழுமையாக மறைக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட பேனர் நிறுவப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு அலுவலகங்களில், குறிப்பாக காவல் நிலையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அரசியல் கட்சிகளின் பேனர்கள் வைப்பது விதிமுறைகளுக்கு முரணானது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இது குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய இடத்திலேயே இவ்வாறு விதிமீறல் நடந்திருப்பது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், காவல் நிலைய வளாகத்திற்குள் இவ்வளவு பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும், இதுவரை அதனை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பேனரை அகற்றுவதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு அலுவலகங்களின் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b