Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 ஜூன் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மருதமலை அருகே அரசு அலுவலகமான வடவள்ளி காவல் நிலைய வளாகத்தில் அரசியல் கட்சி ஒன்றின் பேனர் வைக்கப்பட்டிருப்பதற்கு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
காவல் நிலையம் போன்ற பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அனுமதிப்பது நடுநிலைமைக்கு எதிரானது என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இடத்தில் இது போன்ற செயல்கள் கூடாது என்றும் பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்புகள் வலுத்த நிலையில், காவல் துறை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அந்த பேனரை அப்புறப்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சிகளின் பேனர்கள், கொடிகள் வைப்பதற்கு தேர்தல் ஆணைய விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்கள் தடை விதித்துள்ள நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், பேனர் அகற்றப்பட்டதற்கு சமூக வலைதள பயனர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b