போலீசாரை தாக்கிய சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது
திருநெல்வேலி, 25 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி பேட்டையை அடுத்த சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சினேகானந்த் தலைமையிலான காவல் துறையினர், கொண்டாநகரம் பகுதியில் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆட்
Police attack


திருநெல்வேலி, 25 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி பேட்டையை அடுத்த சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சினேகானந்த் தலைமையிலான காவல் துறையினர், கொண்டாநகரம் பகுதியில் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்றை காவல் துறையினர் நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால், அந்த ஆட்டோ நிற்காமல் காவல் துறையினர் வாகனத்தை இடித்து விட்டு வேகமாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் தங்களது இரு சக்கர வாகனம் மற்றும் போலீஸ் வாகனத்தில் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். அப்போது அவர்கள் காவலர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது ஆட்டோவை மோதும் வகையில் மிக வேகமாக இயக்கியதாகவும், அதில் காவலர்கள் சாமர்த்தியமாக உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், சில கிலோ மீட்டர் துரத்திச் சென்ற காவலர்கள் ஆட்டோவை வழி மறித்து நிறுத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள், காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆட்டோவில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதலில் காவலர் ஜெயபால் என்பவர் காயம் அடைந்தார். ஒரு கட்டத்தில் ஆட்டோவில் இருந்த 3 பேரையும் காவல்துறையினர் பிடித்தனர். அப்போது காயம் அடைந்த காவலர் ஜெயபாலை உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆட்டோவை ஓட்டி வந்தவர் கோடகநல்லூரைச் சேர்ந்த முருகானந்தம் (26) என்பதும், அவருடன் நடுக்கல்லூரைச் சேர்ந்த பிரகாஷ் (36) மற்றும் 17 வயது சிறார் ஆகியோர் இருந்ததும் தெரிய வந்தது.

இவர்களில் இருவர் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் வந்த ஆட்டோவில் இருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தாக்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN