Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
சென்னை தி.நகரில் மதுபோதையில் ஏற்பட்ட இருவேறு தகராறுகளில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரு வழக்குகளிலும் தொடர்புடைய இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் சம்பவத்தில், தி.நகர் கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (50) என்பவர், விஜயா மஹால் திருமண மண்டபத்தில் ஹவுஸ் கீப்பிங் பணியாளராக வேலை செய்து வந்தார்.
வேலை முடித்து சென்ற அவர், பின்னர் தியாகராயா சாலையில் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், ராஜேந்திரனுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறின் காரணமாக, ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி அவரை பின்தொடர்ந்து சென்று தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், தியாகராயா சாலையில் உள்ள விஜயா மஹால் திருமண மண்டபத்தின் பின்புற வாகன நிறுத்துமிடத்தில் ரவி குமார் (46) என்பவர் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், திருமண நிகழ்ச்சிகளுக்குப் பிறகு சுத்தம் செய்யும் பணிகளுக்கான மேஸ்திரியாக பணியாற்றி வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மாம்பலம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்கிற சொர்ணகுமார் (65), வேலை தொடர்பாக ரவி குமார் அடிக்கடி திட்டியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில், மதுபோதையில் மரக்கட்டையால் தாக்கியதாக தெரியவந்தது.
இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam