எல் நினோ தாக்கத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - வேல்முருகன்
சென்னை,25 ஜூன் (ஹி.ச.) எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் சாகுபடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீர்வள மேலாண்மை பணிக
Velmurugan


சென்னை,25 ஜூன் (ஹி.ச.)

எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் சாகுபடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீர்வள மேலாண்மை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் இயற்கை காலநிலை நிகழ்வே

‘எல் நினோ’ என குறிப்பிடப்படுவதாகவும், இது உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், சில பகுதிகளில் அதிக மழையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகவும், இதையடுத்து ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்கள் வறட்சி அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரியலூர், திருச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறுகிய கால மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டங்களில் முழுமையான பயிர்க் காப்பீடு, எளிய கடன் வசதி, மறுசாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் நீர்வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மழைப்பொழிவு குறைவால் மானாவாரி பகுதிகளில் பயிரிடப்படும் காரிப் பருவப் பயிர்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்பதால், விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்கள் குறித்து வேளாண்மைத் துறை கிராமம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) தயாரித்துள்ள மாவட்ட வாரியான அவசரகால வேளாண் திட்டங்களை உடனடியாக கள அளவில் செயல்படுத்துவதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் உடனடி கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ