வி.பி. சிங்குக்கு உண்மையான மரியாதை சமூகநீதி இலக்கை முழுமையாக அடைவதுதான் – அன்புமணி ராமதாஸ்
சென்னை, 25 ஜூன் (ஹி.ச.) முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் 96-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவ
அன்புமணி


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் 96-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் ஆணைய அறிக்கைக்கு உயிரூட்டி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் பல்வேறு தடைகள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், 1978-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மண்டல் ஆணையத்தின் அறிக்கையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படுத்திய பெருமை வி.பி. சிங்கையே சாரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே சமூகநீதியாளர்களின் நீண்டகால கோரிக்கை என்றும், தற்போது மத்திய மற்றும் மாநில அளவில் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சமூகநீதி சர்வே ஆகியவை அந்த இலக்கை நோக்கிய முதல் படியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

மத்தியிலும் மாநிலத்திலும் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கும் சமூகநீதி இலக்கை அடைவதே, வி.பி. சிங்குக்கு செலுத்தப்படும் உண்மையான மரியாதையாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P