Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் சார்பில், சிறந்த இலக்கியப் படைப்புகளை வெளியிட எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 11 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 9 எழுத்தாளர்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரச்சினைகள் குறித்து எழுதும் பிற சமூகத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரும், பழங்குடியினர் வாழ்க்கை மற்றும் பிரச்சினைகள் குறித்து எழுதும் ஒரு எழுத்தாளரும் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் எழுத்தாளர்களின் சிறந்த இலக்கியப் படைப்புகளை வெளியிட ஊக்கத்தொகையாக தலா ரூ.1,00,000 வழங்கப்படும்.
கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, புதினம் உள்ளிட்ட எந்த வகை படைப்புகளாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் படைப்புகளும் பரிசீலனை செய்யப்படும். ஆராய்ச்சிக் கட்டுரைகள் அரிய மற்றும் சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும். படைப்புகள் குறைந்தபட்சம் 90 பக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட நூல்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஒருமுறை இந்த உதவித்தொகை பெற்ற எழுத்தாளர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.
படைப்புகளைத் தேர்வு செய்வது தொடர்பாக அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானதாகும்.
2025-26 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் தமிழக அரசின் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்புகளை இரண்டு அச்சு நகல்களுடனும், டிஜிட்டல் வடிவிலும், கைபேசி எண்ணை குறிப்பிட்டு உரிய விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து, “இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னை – 600005” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ