Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 25 ஜூன் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அமைச்சர் எ.வ.வேலு, டெண்டர் விடுவதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 35 அதிகாரிகள் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் ஏழு தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சோ.கூடலூரில் அமைந்துள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு முகாமிட்டு தீவிர ஆய்வு செய்து வருகிறது.
இதேபோல் திருவண்ணாமலை தென் மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரண் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசு டெண்டர்களை விடுவதில் எ.வ.வேலு பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலை முதல் தொடங்கிய இந்த சோதனை தற்போது வரை நீடித்து வருகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பணம், நகைகள் குறித்த விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் ஏழு இடங்களில் நடைபெறும் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b