Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரப்பிரதேசம், 26 ஜூன் (ஹி.ச.)
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச்செயலாளரும், விஸ்வ இந்து பரிஷத் (VHP) மூத்த தலைவருமான சம்பத் ராய் (Champat Rai) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன் அறங்காவலர் அனில் மிஸ்ராவும் பதவி விலகியுள்ளார்.
இந்த விவகாரத்தில், கோயிலுக்கான காணிக்கைப் பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் கையாளப்பட்ட விதத்தில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து உத்தரப்பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணையின் தொடக்க அறிக்கையின் அடிப்படையில், காணிக்கை எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தார்மீகப் பொறுப்பை ஏற்கும் வகையில் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தை காரணமாகக் கொண்டு அயோத்தி அல்லது ராமர் கோயிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P