பேனரில் பெயர் வரிசை சர்ச்சை -அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி
விருதுநகர், 26 ஜூன் (ஹி.ச.) சர்வதேச போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற Start Run – Stop Drugs விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில், மேடைப் பேனரில் அமைச்சர் பெயர்கள் இடம்பெற்ற வரிசை தொடர்பாக அமைச்சர்
அமைச்சர் ஜெகதீஸ்வரி


விருதுநகர், 26 ஜூன் (ஹி.ச.)

சர்வதேச போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற Start Run – Stop Drugs விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில், மேடைப் பேனரில் அமைச்சர் பெயர்கள் இடம்பெற்ற வரிசை தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 5 கிலோமீட்டர் விழிப்புணர்வு மாரத்தானை சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஓட்டம், நடைபயிற்சிச் சாலையைச் சுற்றி மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பின்னர் சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் சிறந்த மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைப் பேனரில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிலும், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் இடம்பெற்றிருந்தது.

இதைக் கவனித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், இது எனது துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி. புரோட்டாக்கால் படி முதலமைச்சரின் பெயருக்கு அடுத்ததாக எனது பெயர் இடம்பெற வேண்டும். இதை பலமுறை கூறியிருந்தும் மீண்டும் ஏன் இதே தவறு நடக்கிறது? என்று கேள்வி எழுப்பி கண்டித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி அமைச்சரை சமாதானப்படுத்தினார்.

இந்த சம்பவம் அரசு விழாவில் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடைபெற்றதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேவேளை, இதனை விருதுநகர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் அமைச்சர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டின் வெளிப்பாடாக சிலர் விமர்சித்தாலும், அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / GOKILA arumugam