போலி ஆவணங்கள் மூலம் நீதிமன்ற உத்தரவு பெற்றதாக அதிமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு
சென்னை, 26 ஜூன் (ஹி.ச.) நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து சாதகமான உத்தரவைப் பெற்றதாகக் கூறி, அதிமுக நிர்வாகி விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரி சென்னை உயர்நீதிமன்றம் நோட்
High court


சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)

நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து சாதகமான உத்தரவைப் பெற்றதாகக் கூறி, அதிமுக நிர்வாகி விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் காங்கிரீட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மகாதேவன் தாக்கல் செய்த மனுவில், தனக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் சொகுசு கார்கள் மீது உரிமை கோரி விஜயகுமார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வழக்கில் உண்மைக்கு புறம்பான மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் ஒன்றை ஆவணமாக சமர்ப்பித்து, பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதனை அடிப்படையாகக் கொண்டு தனக்குச் சாதகமான உத்தரவை விஜயகுமார் பெற்றுள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி மோசடி செய்ததாகக் கூறப்படும் விஜயகுமார் மீது விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக நிர்வாகி விஜயகுமார், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி அதிகாரிகள் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதில்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் முடிவு எடுக்க உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ