Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூன் (ஹி.ச)
தமிழக அரசின் அடுத்த நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய் ஜூலை 2 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை துறைவாரியான ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார். இந்தக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழக நிதிநிலை அறிக்கை ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி பல்வேறு துறைகளின் திட்டங்கள், நிதி தேவைகள் மற்றும் செயல்பாட்டு முன்னுரிமைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ள “வெற்றி தமிழகம்” தொலைநோக்கு திட்டத்தில் இடம்பெற்றுள்ள வளர்ச்சி திட்டங்களை ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு கால கட்டங்களாகப் பிரித்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவுள்ள புதிய திட்டங்கள் மற்றும் அவற்றுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
அதோடு, துறைரீதியான வெளிப்படையான நிர்வாகம், திட்டங்களின் செயல்திறன், மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிர்வாக மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள், அரசின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளை செயல்திட்டங்களாக மாற்றுவதற்கும், அடுத்த நிதிநிலை அறிக்கையை வளர்ச்சியை மையப்படுத்திய ஆவணமாக உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ