முதல்வர் விஜய் அறிவித்த ANTF-க்கு முதல் வெற்றி - மகாராஷ்டிராவில் போதைப்பொருள் டீலர் கைது
தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.) முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த மாவட்ட வாரியான போதைப்பொருள் தடுப்புப்படை (ANTF - Anti-Narcotics Task Force) அமைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே, சென்னையில் முதல் முக்கிய நடவடிக்கையாக போதைப்பொருள் விற்பனையாளர
கைது


தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.)

முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த மாவட்ட வாரியான போதைப்பொருள் தடுப்புப்படை (ANTF - Anti-Narcotics Task Force) அமைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே, சென்னையில் முதல் முக்கிய நடவடிக்கையாக போதைப்பொருள் விற்பனையாளரை மகாராஷ்டிராவில் கைது செய்து, உயர் ரக போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜோசப் விஜய் அறிவித்த முக்கிய திட்டங்களில் ஒன்றாக, மாவட்டம் தோறும் தனித்துவமான ANTF அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வ தொடக்கம் இன்னும் நடைபெறாத நிலையில், நியமிக்கப்பட்ட காவலர்கள் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, கடந்த ஜூன் 20-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட ANTF போலீசார் நடத்திய சோதனையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சங்கீதா, சிரஞ்சீவி மற்றும் ஜான் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 30 கிராம் மெத், 10 கிராம் MDMA உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சங்கீதாவின் கணவர் சண்முகம் தலைமறைவாக இருந்தார். அவரது வாகன பதிவு மற்றும் மொபைல் சிக்னல்களை வைத்து போலீசார் கண்காணித்தபோது, அவர் மகாராஷ்டிரா மாநிலம் நோக்கிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா போலீசார் சண்முகத்தை கைது செய்ததைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் ANTF போலீசார் அங்கு சென்று அவரை காவலில் எடுத்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது சண்முகத்திடமிருந்து 350 கிராம் மெத், 5 கிராம் MDMA, LSD ஸ்டாம்புகள், 50 கிராம் O.G. கஞ்சா உள்ளிட்ட உயர் ரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சண்முகம் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததும், தொழில் நிமித்தமாக பெங்களூரு சென்றபோது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, அவர்களிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சண்முகம் வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam