Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் திடக்கழிவு சேகரிப்பு, போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை பொது–தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் செயல்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையை தமிழக அரசு தற்போது கைவிட்டுள்ளது.
இதற்காக சாத்தியக்கூறு (Detailed Feasibility Report - DFR) அறிக்கை தயாரிக்க ஆலோசனை நிறுவனங்களை நியமிக்கும் நோக்கில் விடப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த வாரம், அவடி, தாம்பரம், வேலூர், ஓசூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளை PPP முறையில் செயல்படுத்துவதற்காக ஆலோசகர்களை நியமிக்கும் டெண்டரை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனம் (TNUIFSL) வெளியிட்டிருந்தது.
அந்த ஆலோசகர்கள் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையையும், பரிவர்த்தனை ஆலோசனை (Transaction Advisory) பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கை வெளியாகியதும், தூய்மைப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
தனியார்மயமாக்கல் காரணமாக ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலைப் பாதுகாப்பு, ஊதியம் மற்றும் பணியுரிமைகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தின.
அரசின் இந்த முடிவுக்கு ஆளும் தவெக கூட்டணிக்குள்ளேயும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அரசை வலியுறுத்தியது.
சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் டெண்டரே தனியார்மயமாக்கலுக்கான முதல் படி என்பதால், அதை கைவிட வேண்டும் என்று கூட்டணி கட்சி வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த எதிர்ப்பு மற்றும் கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இதன் மூலம், 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை PPP முறையில் தனியார்மயமாக்கும் முயற்சி தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P