Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 ஜூன் (ஹி.ச.)
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது ஆன்லைன் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை மூன்று நாட்களுக்கு முக்கிய சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த காலகட்டத்தில் உறுப்பினர்கள் புதிய PF கிளைம்கள், முன்பணம் (Advance), கணக்கு பரிமாற்றம் (Transfer Claim) உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.
இந்த பராமரிப்பு பணிகள் ஜூன் 26 நள்ளிரவு முதல் ஜூன் 28 இரவு வரை நடைபெறவுள்ளதால், கிளைம் சமர்ப்பிப்பு மற்றும் கிளைம் செயலாக்கம் முழுமையாக நிறுத்தப்படும்.
இருப்பினும், இந்த காலத்திற்கு முன்பாக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட கிளைம்கள் ரத்து செய்யப்படமாட்டாது என்றும், பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு அவை வழக்கம்போல் செயல்படுத்தப்படும் என்றும் EPFO தெரிவித்துள்ளது.
போர்டல் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தாலும், உறுப்பினர்கள் தங்களின் PF கணக்கு தொடர்பான தகவல்களை SMS, Missed Call சேவைகள் மற்றும் EPFO உதவி எண் 14470 மூலம் பெற முடியும். மேலும், பிராந்திய EPFO அலுவலகங்களின் வாட்ஸ்அப் சேவையையும் தகவல் பெற பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணிகள் முடிந்த பிறகு, EPFO-வின் ஆன்லைன் சேவைகள் மேலும் வேகமாகவும், பாதுகாப்பாகவும் செயல்படும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, PF தொகை பெறுதல், முன்பணம் கோருதல் அல்லது கணக்கு பரிமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள உறுப்பினர்கள், ஜூன் 29-க்கு பிறகு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு EPFO அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P