Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 26 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் பகுதியில் உள்ள நாரை ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அனுமதிகளுடன் அப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு வண்டல் மண்ணை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் புகழ்வேந்திரன், வண்டல் மண் எடுப்பதற்காக விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டதாக சில விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அரசு சார்பில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக பணம் எதற்காக வழங்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சம்பவ இடத்திற்கு வந்ததாக கூறப்படும் புகழ்வேந்திரனின் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் எந்த அடிப்படையில் பணம் கேட்கப்படுகிறது என விவசாயிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்த நிலையில், விவசாயிகள் மற்றும் தவெக நிர்வாகி இடையே நடைபெற்ற வாக்குவாதக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதனிடையே, விவசாயிகளிடம் பணம் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்றும், தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam