Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஐஏஎஸ்–ஐபிஎஸ் மாநாட்டை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்து தலைமைச் செயலாளர் எம். சாய் குமாருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த மாநாடு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தச் சந்திப்பில், மாநாட்டின் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு, காவல்துறை செயல்பாடுகள், மாவட்ட வாரியான முக்கிய விவகாரங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் முன்வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழகம் முழுவதிலுமிருந்து மாநாட்டில் பங்கேற்க உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விவாதிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள், காவல்துறையின் செயல்திட்டங்கள் மற்றும் கொள்கை பரிந்துரைகள் அடங்கிய ஆவணங்களை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தயாரித்து, அதன் நகலை தலைமைச் செயலாளர் சாய் குமாரிடம் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த மாநாட்டை முன்னிட்டு அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயார்நிலையை உறுதி செய்யும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையில் ஜூன் 28-ஆம் தேதி அனைத்து துறைச் செயலாளர்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P