Enter your Email Address to subscribe to our newsletters

கொடைக்கானல், 26 ஜூன் (ஹி.ச.)
மொகரம் பண்டிகையைத் தொடர்ந்து கிடைத்துள்ள மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தற்போது தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மூஞ்சிக்கல், கல்லறை மேடு, உகார்தே நகர், நாயுடுபுரம் பேருந்து நிலையம், செவென் ரோடு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
சில இடங்களில் வாகனங்கள் 3 கிலோமீட்டருக்கும் மேல் வரிசையாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் வாகனங்கள் மெதுவாகவே நகர்ந்தன.
கொடைக்கானலில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் இதுபோன்ற நெரிசல் ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தரத் தீர்வாக முக்கிய சாலைகளை விரிவுபடுத்துவதுடன், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால்தான் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P