அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -ரூ.27 லட்சம் வரை சிகிச்சை உதவி அரசாணை வெளியீடு
தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் 2026 ஜூலை 1 முதல் 2031 ஜூன் 30 வரை ஐந்த
தலைமைச் செயலகம்


தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் 2026 ஜூலை 1 முதல் 2031 ஜூன் 30 வரை ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். இந்தத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.7.50 லட்சம் வரை பணமில்லா (Cashless) மருத்துவச் சிகிச்சை வழங்கப்படும்.

மேலும், குறிப்பிட்ட 46 வகையான தீவிர நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ரூ.12 லட்சம் வரை காப்பீட்டு உதவி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிய நோய்கள் மற்றும் சிறப்பு மருத்துவத் தேவைகளுக்காக தனியாக உருவாக்கப்படும் கார்பஸ் நிதியின் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் வரை உதவி வழங்கப்படும். இதன் மூலம் ஒரு குடும்பம் மொத்தமாக ரூ.27 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை உதவியைப் பெற முடியும்.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 2,992 வகையான சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகள், 46 சிறப்பு சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், 1,535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் ஒரு ஊழியருக்கு ரூ.4,500 பிரீமியம் தொகையை காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தும். அதே நேரத்தில், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.390 பிடித்தம் செய்யப்படும்.

இதில் ரூ.375 காப்பீட்டு சந்தாவாகவும், ரூ.15 கார்பஸ் நிதிக்கான பங்களிப்பாகவும் வசூலிக்கப்படும்.

அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து நிரந்தர அரசு ஊழியர்களும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிபவர்கள் இந்தத் திட்டத்தின் வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அதிக செலவுடைய சிகிச்சைகளுக்கும் கூடுதல் நிதி உதவி கிடைக்கும் வகையில் அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P