Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசின் கீழ் செயல்படும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழக அரசின் உயர்கல்வித் துறையை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து கல்லூரி மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு கலைக் கல்லூரிகளில் கணிசமான இடங்கள் காலியாக இருப்பது உயர்கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு எதிரான கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு அறிவித்த காலக்கெடு முடிந்த பின்னரும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட்டிக்கப்பட்ட நிலையிலும், பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாதது கவலைக்குரியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசு கல்லூரிகளில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கல்லூரிகளின் கட்டமைப்பு மற்றும் மாணவர் சேர்க்கை நிலவரங்களை ஆய்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என விமர்சித்தார்.
உயர்கல்வித் துறையை திறம்பட நிர்வகித்து, அரசு கல்லூரிகளின் தரம் மற்றும் மாணவர் சேர்க்கையை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ