Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 26 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி ஜங்ஷனைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (56), தனது குடும்பத்திற்காக Star Health and Allied Insurance Company நிறுவனத்தில் Family Health Optima Insurance Plan எடுத்திருந்தார்.
இதற்காக ₹24,163 பிரீமியம் செலுத்தி, 31.10.2024 முதல் 30.10.2025 வரை பாலிசியை நடைமுறையில் வைத்திருந்தார்.
இந்த நிலையில், அவரது மனைவிவிசாலாட்சி (51) அவர்களுக்கு தைராய்டு பாதிப்பு கண்டறியப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி கோயம்புத்தூரில் உள்ள GKNM மருத்துவமனையில் ரோபோடிக் (Robotic) முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு முன் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்காக மட்டும் ₹30,660 செலவிடப்பட்டது. தொடர்ந்து 12.08.2025 அன்று நடைபெற்ற அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனைச் செலவாக மொத்தம் ₹3,36,605 ஆனது.
மருத்துவமனை அனுப்பிய Pre-Authorisation கோரிக்கையை பரிசீலித்த காப்பீட்டு நிறுவனம் முதலில் ₹2,40,000 வரை அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு, வெறும் ₹75,000 மட்டுமே வழங்கி, மீதமுள்ள ₹2,61,605-ஐ வழங்க மறுத்தது.
இதனால், மருத்துவமனையில் உடனடியாக மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில், திருநெல்வேலியிலிருந்து கோயம்புத்தூருக்கு பலமுறை பயணம் செய்து பணம் திரட்டி செலுத்தியதாக மனுதாரர் தெரிவித்தார்.
இதனால் கடுமையான மன உளைச்சல், பொருளாதார சுமை மற்றும் குடும்ப வேதனையை சந்தித்ததாகவும் கூறினார்.
இதையடுத்து, வழக்கறிஞர் அ. பிரம்மா* வழக்கு தாக்கல் செய்தார்
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகா சபாபதி ஆகியோர், காப்பீட்டு நிறுவனத்தின் நடவடிக்கை சேவை குறைபாடு (Deficiency in Service) எனக் கருதி, 25.06.2026 அன்று முக்கிய தீர்ப்பை வழங்கினர்.
அதன்படி, மீதமுள்ள காப்பீட்டு தொகை ₹2,92,265-ஐ 09.12.2025 முதல் 6.5% வட்டியுடன் வழங்க வேண்டும்.
மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்காக ₹25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
வழக்கு செலவாக ₹10,000 வழங்க வேண்டும்.
மொத்தமாக ₹3,27,265 மற்றும் அதற்கான வட்டித் தொகையையும் ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிடப்பட்டது.
அவ்வாறு வழங்கத் தவறினால், அந்தத் தொகைக்கு 9% வட்டி செலுத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN