Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 26 ஜூன் (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் உள்ள பொதுக் கழிவறை அருகே, அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் 6 வயது சிறுமியைத் தனது மடியில் உட்கார வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சிறுமி, அந்த நபரின் கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவந்துள்ளார்.
இதுகுறித்து தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் 'சைல்ட் லைன் 1098'க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு, பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகாரின் அடிப்படையில், பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (52) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டப் பிரிவுகள் 9(m) மற்றும் 10-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 நாட்கள் ஆகியும், குற்றவாளியான பரமசிவத்தை காவல்துறையினர் கைது செய்யாமல் மெத்தனப் போக்கில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரியகுளம் மற்றும் தேவதானப்பட்டி பகுதிகளில் கள்ளச்சந்தையில் கஞ்சா மற்றும் மது விற்பனை தாராளமாக நடைபெற்று வருவதே இதுபோன்ற தொடர் குற்றச் சம்பவங்களுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN