கத்தார் எரிவாயு ஆலை விபத்தில் உயிரிழந்த 3 வாலிபர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்
நெல்லை, 26 ஜூன் (ஹி.ச.) மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எரிவாயு ஆலையில் கடந்த 21-ந்தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பழவூரை அடுத்த சிதம்பராபுரத்தை சேர்ந்த பபித்,
Qatar


நெல்லை, 26 ஜூன் (ஹி.ச.)

மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எரிவாயு ஆலையில் கடந்த 21-ந்தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கொடூர விபத்தில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பழவூரை அடுத்த சிதம்பராபுரத்தை சேர்ந்த பபித், பணகுடி அருகே சிவகாமிபுரத்தை சேர்ந்த சஜித் குமார், அழகிய நம்பியாபுரத்தை சேர்ந்த சுபின் என்ற 3 வாலிபர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களது உயிரிழப்பால் 3 கிராமங்களும் சோகத்தில் மூழ்கிய நிலையில், அரசு சார்பில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களது உடல்களை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலையில் விமான மூலம் 3 பேரின் உடல்களும் திருவனந்தபுரம் வந்தடைந்தது.

அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த கிராமங்களுக்கு கொண்டு வரப்பட்டது. சுபின் உடலுக்கு துணை தாசில்தார் குமார் மலர் வளையம் வைத்தார்.

இதேபோல் சஜித்குமார் உடலுக்கு ராதாபுரம் தாசில்தார் வில்லுடையார், பபித் உடலுக்கு தாசில்தார் சுப்புலட்சுமி ஆகியோர் மரியாதை செய்தனர். தொடர்ந்து உறவினர்களால் 3 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN