17 வயது சிறுமிக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை - போக்சோ வழக்கு பதிவு
விருதுநகர், 26 ஜூன் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ். கொடிக்குளம் பேரூராட்சியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக பேரூராட்சி இணைச் செயலாளர் ஜோசப் (30) மீது 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக போக
போக்சோ


விருதுநகர், 26 ஜூன் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ். கொடிக்குளம் பேரூராட்சியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக பேரூராட்சி இணைச் செயலாளர் ஜோசப் (30) மீது 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, ஜோசப், 17 வயது சிறுமியை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாகவும், சிறுமி அருகில் உள்ள கடைகளுக்கு செல்லும் போதெல்லாம் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தனது காதலை ஏற்க மறுத்தால் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜோசப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜோசப் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டதாகவும், சம்பவம் தொடர்பான தகவல்கள் முறையாக வெளியிடப்படவில்லை என்றும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனினும், இது குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / GOKILA arumugam