வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கான பெற்றோர் உரிமை யாருக்கு ?- 4 வாரங்களில் முடிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 26 ஜூன் (ஹி.ச.) நாமக்கல்லைச் சேர்ந்த தம்பதியர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதால், அந்தக் குழந்தைக்கு பெற்றோர் உரிமை வழங்கக் கோரி நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், குழந்தை பெற உள்ள
உயர்நீதிமன்றம்


சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)

நாமக்கல்லைச் சேர்ந்த தம்பதியர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதால், அந்தக் குழந்தைக்கு பெற்றோர் உரிமை வழங்கக் கோரி நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், குழந்தை பெற உள்ள பெண்ணின் வயது 50-ஐ கடந்துவிட்டது என்றும், வாடகைத் தாயாக செயல்பட உள்ள பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் கூறி அந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஷமீம் அஹமது விசாரித்தார்.

நீதிமன்ற உதவியாளராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டம் என்பது குழந்தை பெற விரும்பும் தம்பதியர், வாடகைத் தாய்மார்கள் மற்றும் பிறக்கவுள்ள குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட நலச்சட்டம் என்றும், சிறிய நடைமுறை குறைபாடுகளை காரணம் காட்டி குழந்தை பெறும் உரிமையை மறுக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

மேலும், குழந்தை பெற விரும்பும் பெண் 50 வயதை பூர்த்தி செய்திருந்தாலும், 51 வயதை அடையும் வரை சட்டப்படி தகுதியுடையவராகவே கருதப்பட வேண்டும் என்றும், தகுதிச் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்யும் மேல்முறையீட்டு அமைப்பைப் போல மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் செயல்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷமீம் அஹமது, நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த தள்ளுபடி உத்தரவை ரத்து செய்தார்.

மேலும், மனுவை மீண்டும் பரிசீலித்து, நான்கு வாரங்களுக்குள் உரிய முடிவெடுக்குமாறு நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

அத்துடன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் வழக்குகளை கையாளும் போது அனைத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாடகைத் தாயாக செயல்பட உள்ள பெண் தனது முழு விருப்பத்துடன் சம்மதித்துள்ளாரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த பிறகு அதன் மீது உரிமை கோரமாட்டேன் என்ற உறுதிமொழியை அவரிடம் பெற வேண்டும்.

இந்த நடைமுறையில் எந்தவித வணிக நோக்கமும் இல்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்; மேலும், குழந்தையை கைவிடமாட்டோம் என்ற உத்தரவாதத்தை குழந்தையை பெற உள்ள தம்பதியரிடமும் பெற வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவோர் தாக்கல் செய்யும் பெற்றோர் உரிமை மனுக்கள் அனைத்தையும் நான்கு வாரங்களுக்குள் முடித்து வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வருவதற்காக, தீர்ப்பின் நகலை அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் அனுப்பி, உரிய சுற்றறிக்கைகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதி ஷமீம் அஹமது உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P