துங்கபத்ரா நீர் பங்கீடு குறித்து முதல்-மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் - பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் வலியுறுத்தல்
ஐதராபாத் , 26 ஜூன் (ஹி.ச.) துங்கபத்ரா அணையில் இருந்து தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர் பங்கீடு குறித்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெலங்கானா பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் வலியுறுத்தினார். ஐத
A


ஐதராபாத் , 26 ஜூன் (ஹி.ச.)

துங்கபத்ரா அணையில் இருந்து தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர் பங்கீடு குறித்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெலங்கானா பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் வலியுறுத்தினார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலம் ஹோசபெட்டில் உள்ள துங்கபத்ரா அணையில் 33 புதிய ஸ்பில்வே கதவுகள் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக முதல்-மந்திரிகள், மத்திய ஜல் சக்தி மந்திரி சி.ஆர். பாட்டில் ஆகியோர் பங்கேற்றனர்.

இருப்பினும், தெலங்கானாவுக்கு உரிய நீர் பங்கீடு குறித்து மாநில அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.

சமீபத்தில் மத்திய ஜல் சக்தி மந்திரியுடன் நடைபெற்ற ஆலோசனையில், மாநிலத்தின் நீர் உரிமைகள் தொடர்பாக என்னென்ன விவகாரங்கள் எடுத்துரைக்கப்பட்டன என்பதை அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இரண்டு முக்கிய நீர்ப்பாசன திட்டங்களின் கீழ் தெலங்கானாவுக்கு 15.9 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ கணக்குப்படி 5 டி.எம்.சி. மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய அளவை விட குறைவான நீர் பங்கீட்டுக்கு முந்தைய அரசில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எஸ்.ஐ.ஆர். (SIR) நடைமுறை குறித்து ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்த கருத்துகளையும் ராமச்சந்தர் ராவ் விமர்சித்தார்.

பாஸ்போர்ட் என்பது பயண ஆவணம் மட்டுமே தவிர, இந்திய குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்றும், எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் அடையாளத்தை உறுதிப்படுத்த 12 வகையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA