திருப்பத்தூர் அருகே மொகரம் விழா- இந்து,முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றிய 350 ஆண்டுகள் பழமையான பூக்குழி திருவிழா
சிவகங்கை 26 ஜூன் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வஞ்சினிப்பட்டி கிராமத்தில், சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மொகரம் பண்டிகை மற்றும் ''அல்லாசாமி'' பூக்குழி திருவிழா, இந்து–முஸ்லிம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக வ
பூக்குழி திருவிழா


சிவகங்கை 26 ஜூன் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வஞ்சினிப்பட்டி கிராமத்தில், சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மொகரம் பண்டிகை மற்றும் 'அல்லாசாமி' பூக்குழி திருவிழா, இந்து–முஸ்லிம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக வெகுவிமரிசையாக நடைபெற்றது.

17-ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து பங்கேற்று மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

மொகரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர். அதேவேளை, இந்து பக்தர்கள் மல்லிகைப் பூ மற்றும் சர்க்கரை வைத்து அல்லாவை வணங்கி வழிபட்டனர்.

அதிகாலை நடைபெற்ற முக்கிய நிகழ்வில், கூடார வாசலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியை பக்தர்கள் மூன்று முறை வலம் வந்து, பின்னர் சட்டையின்றி பூக்குழிக்குள் இறங்கி நெருப்பை கைகளால் அள்ளி இறைத்தனர்.

தொடர்ந்து ஆண்கள் அள்ளிய நெருப்பை பெண்கள் தங்களது முந்தானையில் ஏந்தி, நேர்த்திக்கடனாக நெஞ்சில் வைத்து பின்னர் கீழே கொட்டும் வினோத வழிபாடு நடைபெற்றது.

குழந்தை வரம், திருமணம் உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக பெண்கள் இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பூக்குழியில் இருந்த சாம்பலை இஸ்லாமியர்கள் இந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிய நிகழ்வும் நடைபெற்றது.

இக்கிராமத்தில் இந்துக்கள் விருந்தினர்களுக்கு அசைவ விருந்து அளித்த நிலையில், இஸ்லாமியர்கள் விரதம் இருந்து சைவ உணவு உண்டு விழாவைக் கொண்டாடியது சிறப்பம்சமாக இருந்தது.

பல தலைமுறைகளைத் தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விழா, மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam