வறுமை காரணமாக 7 நாள் பெண் குழந்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை – போலீசார் தீவிர விசாரணை!
சேலம், 26 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சந்தன காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கவிதா. தறி நெய்யும் தொழில் செய்து வரும் இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். போதிய வரு
பெண் குழந்தை


சேலம், 26 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சந்தன காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்.

இவரது மனைவி கவிதா. தறி நெய்யும் தொழில் செய்து வரும் இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால், கடுமையான வறுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் இவர்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 19ஆம் தேதி கவிதாவுக்கு அரியானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே உள்ள மூன்று குழந்தைகளை வளர்க்கவே திணறி வரும் நிலையில், நான்காவது குழந்தையையும் வளர்க்க முடியாது என இந்த தம்பதியர் கருதியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்குப் பிறந்த 7 நாட்களேயான பெண் குழந்தையை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு வெளியில் தெரியாமல் இரண்டு லட்ச ரூபாய்க்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர்.

போலீசார் அதிரடி நடவடிக்கை:

ரகசியமாக நடந்த இந்த குழந்தை விற்பனை குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலம்பரசனுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சீனிவாசன்-கவிதா தம்பதியரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், குழந்தையை விலைக்கு வாங்கிச் சென்ற ராமநாதபுரம் தம்பதியருக்கும் போலீசார் அவசரத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, தாங்கள் வாங்கிய குழந்தையைத் திரும்ப ஒப்படைக்க ஒப்புக்கொண்ட ராமநாதபுரம் தம்பதியர், குழந்தையுடன் காரில் சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

வறுமையில் வாடும் சீனிவாசன் - கவிதா தம்பதியினர் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே குழந்தையை விற்பனை செய்தார்களா? அல்லது இதற்குப் பின்னணியில் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் 'புரோக்கர்' கும்பல் ஏதேனும் செயல்பட்டு வருகிறதா? என்ற கோணத்தில் கொண்டலாம்பட்டி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வறுமையின் காரணமாகப் பெற்ற குழந்தையையே 2 லட்ச ரூபாய்க்கு விற்ற இந்த துயரச் சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam